Powered By Blogger

88. பகைத் திறம் தெரிதல்

அதிகாரம் #88 பகைத் திறம் தெரிதல் 
(பகையிடத்தே கொள்ள வேண்டிய திறன்களை அறிதல்)
பொருட்பால் | அங்கவியல் குறள்# 871-880

871
பகைஎன்னும் பண்பு இலதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று.

பகைமை எனும் உணர்வானது, பண்பில்லாத தன்மையாதலால் அதனை யாவரும் விளையாட்டாகக் கூட விரும்புதல் கூடாது.

872
வில்ஏர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்ஏர் உழவர் பகை.

வில்லை படையின்கண் ஆயுதமாகக் கொண்ட ஒரு வீரரிடம் கூட பகை கொள்ளலாம்; ஆனால், கற்றறிந்த அறிவுசார் சொல்லை ஆயுதமாகக் கொண்ட அறிஞர் பெருமகனிடம் பகைமை கொள்ளல் கூடாது. 

873
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.

தன்னந்தனி ஆளாக இருந்து கொண்டு பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன், பித்தன் என்பதை விடவும் அறிவற்றவன் என்றே கருதப்படுவான்.

874
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு.

பகைவர்களையும் நட்பாக்கிக் கொண்டு பழகுகின்ற நற்பண்பு மிக்கவர்களைக் கொண்டோரின் பெருந்தன்மையின்-கீழ் இவ்வுலகம் தங்குவதாகப் பெருமையுடன் போற்றப்படும். 

875
தன்துணை இன்றால் பகைஇரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.

தனக்கென பலமான துணையே இல்லை என்ற நிலையில், தம் பகைவர்கள் இரு பிரிவாக எதிர்நிற்கும் நிலை வருங்கால், பகைவருள் ஒருவரை இனியவாக நட்பு கொண்டு தம் துணையாகக் கொளல் வேண்டும்.

876
தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.

பகைவரைப் பற்றி தீர ஆராய்ந்து தெரிந்து வைத்திருந்தாலும், தெரிந்திரா விடினும், கேடு வரும் சமயத்தில், அவரிடம் நட்பளவிற்கு நெருங்கி விடாமலும், பகையளவிற்கு விலகிவிடாமலும் வாளாவிருத்தல் நன்றாகும்.

877
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து.

தனது துன்பங்களைக் குறித்து நண்பர்கள் அறிந்திராத போது, அவைப்பற்றி அவர்களிடம் சொல்ல வேண்டாம்; பகைவரிடத்திலோ தமது வலிமையின் குறைவு பற்றி காட்டிக் கொள்வதும் கூடா. 

878
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் 
பகைவர்கண் பட்ட செருக்கு.

செயலின் வழிவகைகளை அறிந்து, தம்மையும் வலிமைப்படுத்திக் கொண்டு தமக்கான தற்காப்பையும் தேடிக் கொள்பவர் முன்பாக, அவரை எதிர்க்கும் பகைவரது செருக்கு தாமாக அழிந்து போகும். 

879
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.

முள்மரமானது அதை வளர்ந்த பின் வெட்டுபவரின் கையை வருத்தும்; ஆதலால், அது ஆரம்பத்திலேயே சிறியதாய் உள்ளபோதே அழித்துவிடல் வேண்டும்; அதுபோல், பகையையும் அது வலிதாகும் முன்னே முளையிலேயே வீழ்த்திவிடல் வேண்டும். 

880
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்

தம்மிடம் பகைமை கொண்டு எதிர்ப்பவரின் செருக்கை அழித்து, அப்பகையை ஒழிக்கவல்ல திறம் இல்லாதவர், மூச்சு விடுவதாலேயே அவர் உயிர்ப்போடு இருப்பவராகக் கருதப்பட மாட்டார்.  


வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *