(கல்வி கேள்வி அறிவோடு மெய்யறிவும் உடையவராயிருத்தல்)
அதிகாரம்: 43. அறிவுடைமை பால் வகை: 2. பொருள்
இயல்: 5. அரசியல்421
அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண்.
அறிவு என்பது ஒருவருக்கு அழிவு வராமல் காக்கும் கருவியாகும்; பகைவர் எளிதிற் உட்புகுந்து, அழிக்க இயலாத கோட்டையைப் போன்றதும் ஆகும்.
422
சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.
மனதை, சென்ற இடத்தில் எல்லாம், செல்ல விடாது, தீமைகளை ஆராய்ந்து, நம்மைத் தீமையிலிருந்து விலக்கி, நல்வழியில் செலுத்துவதே அறிவாகும்.
423
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
எப்பொருளாயினும், யார் வாயினின்று சொல்லக் கேட்பினும், அப்பொருளைக் குறித்து ஆராய்ந்து தெளிந்து, அதன் உண்மைப் பொருளைக் காண்பது தான் அறிவாகும்.
எப்பொருளாயினும், யார் வாயினின்று சொல்லக் கேட்பினும், அப்பொருளைக் குறித்து ஆராய்ந்து தெளிந்து, அதன் உண்மைப் பொருளைக் காண்பது தான் அறிவாகும்.
424
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்நுண்பொருள் காண்பது அறிவு.
பிறர்க்குச் சொல்வனவற்றை, எளிதில் விளங்கும்படி, பொருள் உடையதாகவும், மனதிற் பதியுமாறும் கூறியும், பிறர் கூறுவனவற்றுள், பொதிந்துள்ள நுண் பொருளின் தன்மையைக் காண்பதே அறிவாகும்.
425
உலகம் தழீஇயது ஒட்பம்; மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு.
உலகத்தாரோடு நட்பொழுகத் திகழுதல், சிறந்த அறிவாகும்; அதிலும் அந் நட்பு, முதலில் மகிழ்ந்து விரிதலும், பின்னர் பிரிதலும் சுருங்குதலுமாக இல்லாது, சீராக இருத்தலே அறிவாகும்.
426
எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு.
உயர்ந்தோரின் வழிகாட்டலில் உலகம் எவ்வாறு இயங்குகின்றதோ, அவ்வாறே, உலகத்தோடு சேர்ந்து தானும் வாழ்வதுவே அறிவு ஆகும்.
427
அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃதுஅறி கல்லா தவர்.
அறிவுடையவர், பின்னர் வரக்கூடியனவற்றை, முன்னரே அறிந்திடும் வல்லமை உடையவர் ஆவார்; அறிவில்லாதவரோ, அவ்வாறு அறிந்திட இயலாதவர்.
428
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை; அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.
அஞ்ச வேண்டியனவற்றுக்கு அஞ்சாது இருத்தல் அறிவின்மை; அஞ்ச வேண்டியனவற்றுக்கு அஞ்சுதல், அறிவுடையோரின் செயலாகும்.
429
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதுஓர் நோய்.
பின்னர் வரக்கூடியதை முன்னதாகவே அறிந்து, தம்மைக் காத்துக் கொள்ளும் அறிவுடையோருக்கு, வாழ்வில் நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் எதுவும் இல்லை.
430
அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவிலார்
என்உடைய ரேனும் இலர்.
அறிவுடையவரிடத்தே, ஒன்றும் இல்லாவிடினும், அவர் எல்லா செல்வமும் உடையவர் ஆவார்; அறிவு இல்லாதவர், எல்லாப் பொருளும் உடையவராயினும், எதுவும் இல்லாத் தன்மையராவார்.

