Powered By Blogger

19.புறங்கூறாமை

(ஒருவர் இல்லாத இடத்து அவர் பற்றி இகழாமை)

அதிகாரம்.19 | அறம் 
| இல்லறவியல் குறள்கள்#181-190
 
181
அறங்கூறான் அல்ல செயினும், ஒருவன்,
புறங்கூறான் என்றல் இனிது.

அறநெறிகளைப் பின்பற்றாது, தீய செயல்கள் செய்பவரே ஆயினும், பிறர் பற்றி புறங்கூறாது வாழ்ந்தாலே சிறப்பு மிக்கதாகும்.

182
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.

ஒருவரிடம் நேரில் பொய்யாக நகைத்துப் புகழ்ந்து பேசுவதும்,  அவர் இல்லாத இடத்தே, அவர் பற்றிப் புறம் பேசுதலும், அறத்தை அழித்து தீய செய்கைகளை செய்தலை விடவும் தீமையானது.

183
புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின், சாதல், 
அறம் கூறும் ஆக்கம் தரும்.

காணும் போது ஒன்றும், காணாதபோது வேறொன்றுமாய் புறம் பேசி பொய்யாய் வாழ்தலை விட, சாதல் என்பது அறம் கூறும் உயர்வைத் தரும்.

184
கண் நின்று கண்ணறச் சொல்லினும், சொல்லற்க,
முன் இன்று, பின் நோக்காச் சொல்.

கண் எதிரே, நேரடியாக ஒருவரின் குறைகளைக் கடுமையாக சொல்லி விடலாம்; ஆனால், விளைவுகளை ஆராயாமல், அவர் இல்லாத போது, புறங்கூறுதல்  கூடாது.

185
அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம் சொல்லும்
புன்மையாற் காணப்படும்.

பிறர் குறித்து, ஒருவர் புறம் பேசும் சிறுமையே, அவர் அறமற்ற இழிபண்பினர் என்பதைக் காட்டி விடும்.

186
பிறன்பழி கூறுவான், தன்பழி யுள்ளும்,
திறன்தெரிந்து, கூறப்படும்.

ஒருவர், பிறர் மீது புறங்கூறுபவரெனில், அவரது தீயச் செயல்களையும் கண்டறிந்து ஆராய்ந்து, அவற்றுள் கொடியனவற்றை பிறராலும் எடுத்துக் கூறப்படும்.

187
பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர், நகச் சொல்லி
நட்பாடல் தேற்றாதவர்.

இனிமையாய் உறவாடி நட்பை வளர்க்காதவர்கள், நட்பு கெடும் விதமாய் புறம்பேசி, சுற்றம் நட்புகளையும் பிரிந்திடச் செய்து விடுவர்.

188
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு. 

உற்ற நண்பர்களின் குற்றங் குறைகளைப் புறம் பேசி, தூற்றும் இயல்புடையவர்கள், அவ்வாறு பழகிடாத அயலாரைக் குறித்து,  என்னதான் பேசமாட்டார்?

189
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம், புறன்நோக்கிப்,
புன்சொல் உரைப்பான், பொறை.

பிறர் மீது பழிசுமத்தி, புறங்கூறுபவருடைய உடலைச் சுமப்பதை, இந்த நிலம், ஓர் அறமாகக் கருதியே தாங்கிக் கொள்கின்றதோ?

190
ஏதிலார் குற்றம்போல், தன்குற்றம் காண்கிற்பின்,
தீது உண்டோ, மன்னும் உயிர்க்கு.

பிறரது குற்றங்களைக் காண்பது போல், தன் குற்றங்களையும் உணர்ந்து, புறம் பேசாத ஒருவரின் நிலைபெற்ற வாழ்விற்கு, துன்பம் தான் வருவதுண்டோ?

அடுத்த அதிகாரம் ➤ 20.பயனில சொல்லாமை

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *