Powered By Blogger

49.காலம் அறிதல்

(செயலாற்றுமுன் தகுந்த காலத்தை அறிதல்)

பொருட்பால் | அரசியல் | அதிகாரம் 49

481
பகல்வெல்லும் கூகையைக் காக்கை; இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

காக்கையானது, தன்னிலும் வலிய கோட்டானை பகல்  பொழுதில் வென்று விடும்; அதுபோல, அரசர் தம் பகையை வெல்வதற்கு ஏற்ற காலம் அமைவது அவசியமாகும்.  

482
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் 
தீராமை ஆர்க்கும் கயிறு.

காலத்தோடு பொருந்துமாறு செயலாற்றுவது என்பது, தன்னிடமிருக்கும் செல்வத்தைத் தவற விடாமல் கட்டும் கயிறாக அமைவதாகும். 

483
அருவினை என்ப உளவோ கருவியான் 
காலம் அறிந்து செயின்?

ஒரு செயலை செய்து முடிக்கத்தக்க கருவிகளோடும், தகுந்த காலத்தை உணர்ந்தும் திறம்பட செய்பவருக்கு, செய்வதற்கு அரிய செயல் என ஒன்று உண்டோ?

484
ஞாலம் கருதினுங் கைகூடும் காலம் 
கருதி இடத்தாற் செயின்.

இந்த உலகம் தமக்கென வேண்டினும், அதற்கென தகுந்த காலத்தையும், இடத்தையும் ஆராய்ந்தறிந்து, திறம்பட செயல்பட்டால், அந்த செயல் கைக்கூடும்.  

485
காலம் கருதி இருப்பர் கலங்காது 
ஞாலம் கருது பவர்.

இந்த உலகை வென்றிடக் கருதும் ஒருவர், அதற்கான தகுந்த காலத்தை எதிர்நோக்கி, பொறுமையுடன் கலங்காமல் காத்திருப்பர். 

486
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர் 
தாக்கற்குப் பேரும் தகைத்து.

ஆற்றல் மிக்க ஒருவர், தகுந்த காலத்தை எதிர்பார்த்து அமைதி காப்பதானது, ஆட்டுக்கடா, தன் பகையைப் பாய்ந்து தாக்கிட, தகுந்த சமயத்தை எதிர்பார்த்து, பின்வாங்குவதைப் போன்றது. 

487
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

அறிவு மிக்கவர்கள், தமது பகைவர் தீங்கு செய்யும் கணமே, தம் சினத்தை வெளிக்காட்ட மாட்டார்; பகையை வெல்லும் காலமும், இடமும் வாய்க்கும் தருணத்திற்காகக் காத்திருப்பார். 

488
செறுநரைக் காணின் சுமக்க; இறுவரை 
காணின் கிழக்காம் தலை.

பகைவரைக் காணுமிடத்தே, பகைமையைத் தாங்கிக் கொண்டு பொறுமை காத்தல் வேண்டும்; அவர்க்கு அழிவுக் காலம் வரும் சமயம், தலை கவிழ்ந்து தடையின்றி தாமாக அழிந்து போவார்.

489
எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அரிய செயல்.

கிடைத்தற்கு அரிய காலம் வரும்போது, அதை நல்வாய்ப்பெனக் கொண்டு, அப்பொழுதே, செய்வதற்கு அரியதான செயல்களை செய்து முடித்தல் வேண்டும்.

490
கொக்குஒக்க கூம்பும் பருவத்து மற்றுஅதன்
குத்துஒக்க சீர்த்த இடத்து.

தகுந்த காலம் வாய்த்திடக் காத்திருக்கும் கொக்கைப் போல பொறுமையோடிருந்து, தக்க சமயத்தில், குறி தப்பாது இரையைக் குத்திப் பிடிப்பதைப் போல், ஆற்றல் கொண்டு செயல்பட வேண்டும்.

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *