(சிறந்த பிள்ளைகளைப் பெறுவதன் சிறப்பு)
அதிகாரம் 1. மக்கள்பேறு | அறம் | இல்லறம் | குறள்கள் 61-70
61
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.
அறிவு மிக்க பிள்ளைகளைப் பெறுதலை விடவும், ஒருவருக்கு இல்வாழ்க்கையில், சிறந்த பேறு வேறு எதுவும் இல்லை.
62
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.
பிறரது பழித்தலுக்கு இடமின்றி, நற்பண்புகளோடு பிள்ளைகளைப் பெறுபவர்க்கு, அவர்தம் எழுபிறப்பிலும் துன்பம் வருவதில்லை.
63
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.
ஒருவர்க்கு தாம் பெற்ற பிள்ளைகளே செல்வம் ஆகும்; அப்பிள்ளைகள் செல்வமாவது, அவரவர் நற்செயல்களால் வாய்க்கப் பெறுவதாகும்.
64
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
தம் மழலையின் துளிர்க் கரங்களால் அளாவப் பெற்ற கூழ் உணவானது, அப் பெற்றோருக்கு அமிழ்தை விடவும், இனியதாகும்.
65
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
தம் குழந்தைகளை அன்பால் தழுவுதல் உடலுக்கு இன்பம்; அவர்கள் பேசும் இன்சொற்களோ செவிக்கு இன்பம் தருவதாம்.
66
குழலினிது யாழ்இனிது என்பதன் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
தம் குழந்தைகளின் இனிமை கொஞ்சும் மழலைச் சொற்களைக் கேளாதவர்களே குழலிசையும், யாழ் இசையும் இனியவை என்று கூறுவர்.
67
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
தந்தையானவர், தன் மகனுக்கு செய்ய வேண்டிய நன்மை, அவனை அறிவார்ந்தவர் அவையில் சிறந்தவனாய் விளங்கும் கல்வி அறிவுடையவனாக்குதலே ஆகும்.
68
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
பெற்றோரை விடவும், பிள்ளைகள் அறிவாற்றலில் சிறந்து விளங்குதல், அவர்தம் பெற்றோருக்கு மட்டுமன்றி, உலகினர் எல்லோருக்குமே அக மகிழ்ச்சி தருவதாகும்.
69
ஈன்ற பொழுதின் பெரிதுஉவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
தன் மகன் கல்வி, அறிவு, நல்லொழுக்கம் யாவற்றிலும் சான்றோன் என, பிறர் புகழக் கேட்கும் தாய்க்கு, அவனைப் பெற்றெடுத்த பொழுதினும் பெருமகிழ்ச்சி தருவதாகும்.
70
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
மகன் தனது தந்தைக்கு செய்யும் உதவி என்பது "இவன் தந்தை, இவனை மகனாய் பெற, என்ன தவம் செய்தாரோ!" எனப் புகழ்ந்து சொல்லும்படியாக, சான்றோனாய் வாழ்வதே ஆகும்.
அடுத்த அதிகாரம்: 8.அன்புடைமை

