Powered By Blogger

62. ஆள்வினை உடைமை

(முயற்சி உடைமை)

2. பொருட்பால் | 2.1. அரசியல் | அதிகாரம்: 62

611
அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.

நம்மால் முடியாது என்று, மனம் சோர்வடையாது இருத்தல் வேண்டும்; முடியும் என்கிற மன எழுச்சியோடு முயற்சித்தாலே, எதையும் செய்தற்குரிய, வலிமை மிக்கதான ஆற்றலைத் தரும்.

612
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.


ஒரு செயலைத் தொடங்கும் போதே, அதை தொடர்தல் கடிதென்று எண்ணி, அச்செயலை பாதியிலேயேக் கைவிடுவோரை இவ்வுலகம் கைவிட்டு விடும். 

613
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு.

முயற்சி எனப்படும் மேன்மை வாய்ந்த பண்பினால் தான், பிறர்க்கு உதவும் சிறப்பு மிகும் தன்மையானது நிலைப்பெறுகின்றது. 

614
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.

முயற்சி இல்லாதவர் பிறர்க்கு உதவுதல் என்பதானது, படை கண்டு அஞ்சி நடுங்கும் தன்மையுடைய பேடி, போரில் நின்று கையில் வாள் ஏந்துவதைப் போன்றே கேடு விளையும்.

615
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்துஊன்றும் தூண்.

தன் இன்பத்தை விரும்பாது, தான் மேற்கொண்ட செயலை முடிப்பதிலேயே நாட்டம் கொண்டவர், தன் நட்பு சுற்றம் தன் நாட்டு மக்களது துன்பம் போக்கி, தாங்கும் தூண் போன்றவர் ஆவார். 

616
முயற்சி திருவினை ஆக்கும்; முயற்றுஇன்மை
இன்மை புகுத்தி விடும்.

முயற்சி என்பது ஒருவரின் வாழ்வில் செல்வத்தைக் குவிக்கும்; முயற்சி இல்லாமல் வாழ்பவர்தம் வாழ்வில், வறுமை வந்து சேர்ந்து கொள்ளும்.

617
மடிஉளாள் மாமுகடி என்ப மடிஇலான்
தாள்உளாள் தாமரையி னாள்.

சோம்பல் கொண்டு வாழ்பவரிடத்தே வறுமையின் உருவான, மூதேவியானவள் நிலை கொள்வாள்; சோம்பல் இல்லாது முயற்சியுடையோரிடம் செல்வத்தின் வடிவாகிய திருமகள் குடிகொள்வாள். 

618
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவுஅறிந்து
ஆள்வினை இன்மை பழி.

நன்மை தரக்கூடிய ஊழ்வினை இல்லாது வாழ்தல், யார்க்கும் பழியன்று; அறிய வேண்டுவன அறிந்து, முயற்சி இல்லாமல் வாழ்தலே பழி ஆகும்.

619
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் 
மெய்வருத்தக் கூலி தரும்.

தெய்வத்தின்  சக்தியாலும் இயலாமற் போன செயலில், ஒருவர் தன் உடல் வருத்தி முயற்சி கொண்டு செய்வாராயின், வெற்றி பெற்று அதற்கான பலனை அடைவார்.  

620
ஊழையும் உப்பக்கம் காண்பர் 
உலைவுஇன்றித் 
தாழாது உஞற்று பவர். 

சோர்வேதும் இல்லாமல் வாழ்வில் விடா முயற்சி கொண்டு செயல்படுபவர்கள், எந்தவொரு செயலுக்கும் இடையூறெனக் கருதப்படும் ஊழ்வினையை புறமுதுகுக் காட்டி ஓடச் செய்து விடுவர். 

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *