(செயலை நிறைவேற்றத்தக்க இடத்தை அறிதல்)
பொருட்பால் | அரசியல் | அதிகாரம் 50
491
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடம்கண்ட பின்அல் லது.
பகைவரை எதிர்கொண்டு வெற்றிகொள்ளத்தக்க, ஏற்ற இடத்தைத் தெரிவு செய்யும் வரையிலும், அச்செயலைத் தொடங்குதல் கூடா; அதன்பின், பகைவரை அற்பர் என இகழ்தலும் வேண்டா.
492
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்துஆம்
ஆக்கம் பலவும் தரும்.
பகையை வெல்லும் மனமும், ஆற்றலும் இருப்பினும், அத்துடன், பாதுகாப்பு மிக்கதான போரிடும் இடமும் அமையப்பெற்றால், பெரும் பயன்கள் பலவும் தரும்.
493
ஆற்றாரும் ஆற்றி அடுப இடன்அறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.
பகைவரை வெல்வதற்கான வலிமையில்லாதவர் ஆயினும், தகுந்த இடமறிந்து, தம்மையும் காத்துக் கொள்ளும் திறனோடு எதிர் கொள்வாராயின், வலிமை உடையவராகி, வெற்றி கொள்வர்.
494
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடன்அறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.
ஏற்ற இடமறிந்து, மனம் பொருந்தியவாறு செயலை செய்யும் ஒருவரை, வென்றுவிட எண்ணும் பகைவர், அந்த எண்ணத்தையே கைவிட்டு, தோற்றுப் போவர்.
495
நெடும்புனலுள் வெல்லும் முதலை; அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.
நீருக்குள் இருக்கும் வரையில் மட்டுமே, முதலைக்குப் பலம்; நீரைவிட்டு நீங்கினால், பிற உயிர்களே முதலையை வென்று விடும். எனவே, இடத்தின் வல்லமையானது செயலுக்கு வலிமை தருவதாகும்.
496
கடலோடா கால்வல் நெடுந்தேர்; கடல்ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து.
வலிமை மிக்க சக்கரங்கள் கொண்ட பெரும் தேர், கடலில் ஓடுதற்கியலாது; கடலில் ஓடவல்ல கப்பல், நிலத்தில் ஓடவியலா. இடத்திற்கேற்ப இயங்கவல்ல கருவிகள் கொண்டு செயலாற்றுக.
497
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்.
தான் செய்யும் செயலை, தக்க இடமறிந்து, நன்கு சிந்தித்து செய்யும்போது, எதற்கும் அஞ்சாத மனஉறுதி ஒன்றைத் தவிர வேறு துணை வேண்டியதில்லை.
498
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.
சிறுபடையை உடையவன், தக்க இடத்தில் ஆற்றல் பொருந்த நிலைத்து செயல்பட்டால், ஆங்கே எதிர் கொள்ளும், பெரும் படையை உடையவனின் ஊக்கம் அழிந்து, தோற்று விடும்.
499
சிறைநலனும் சீரும் இலர்எனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.
பகைவர், வலிமை மிக்க கோட்டையும், ஏனைய படைச் சிறப்புகளும் இல்லாதவர் எனினும், அவர்தம் நிலையான இடத்தின்கண் சென்று, வெல்வது என்பது அரிதாகும்.
500
கால்ஆழ் களரில் நரிஅடும் கண்அஞ்சா
வேலாள் முகத்த களிறு.
பாகனுக்கும் அடங்காது, வேல் ஏந்திய எதிரணிப் பகைவரை, தன் தந்தங்களால் வீழ்த்தும் திறம் பெற்ற யானை கூட, ஆழ் சேற்றில் தம் கால்கள் புதைந்து சிக்கிட நேர்ந்தால், அதனை நரிகள் கூடக் கொன்று விடும்.

