Powered By Blogger

25.அருளுடைமை

(பிற உயிர்களிடத்தும் இரக்கம் கொள்ளும் பண்பு)

அதிகாரம்#25 | அறம் | துறவறவியல் | குறள்கள்
#241-250

241
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.

பெரும்செல்வமானது இழி குணத்தவரிடத்தும் உள்ளது;  ஆனாலும், பிறரிடம் இரக்கம் கொள்வதான அருட் செல்வமே மேலானது. 

242
நல்லாற்றால் நாடி அருளாள்க; பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.

நல்ல நெறிகளைப் பின்பற்றி அருள் மிக்கவராய் திகழ வேண்டும்; பல வழிகளில் ஆராய்ந்து அறியப் பெற்றாலும், அருள் உடைமை ஒன்றே வாழ்க்கைக்கு துணையாகும்.

243
அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.

அருள் மிகுந்த உள்ளம் படைத்தவர்க்கு, இருள் போன்ற துன்ப உலகில் வாழும் நிலை வருவதில்லை.

244
மன்னுயிர் ஓம்பி அருள்ஆள்வார்க்கு இல்லென்ப
தன்உயிர் அஞ்சும் வினை.

பிற உயிர்கள் மீது அருளுடையவராய் வாழும் சான்றோர்க்கு, தன் உயிர் பற்றி அஞ்சி வாழும் தீவினை வருவதில்லை.

245
அல்லல் அருள்ஆள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி.

உள்ளத்தே அருள் நிரம்ப வாழ்வோர்க்கு துன்பமே வருவதில்லை; அதற்கு, காற்றினால் இயங்கும் இப்பெரும் வளமிக்க உலகே  சான்று.

246
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.

அருள் இல்லாது அறந்தவறிய செயல்களை செய்து வாழ்பவரை, பொருள் இழந்து துன்பமுற்றதை மறந்தவர் என்பர்.

247
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

பொருள் இல்லாதவர்க்கு இப் பூவுலகில் இன்ப வாழ்வு இல்லை என்பது போல், அருள் இல்லாதவர்க்கு, மேலுலகத்திலும் சிறந்த வாழ்வில்லை.

248
பொருளற்றார் பூப்பர் ஒருகால்; அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.

ஒருவர் தம் பொருளை இழந்தால், அதை மீண்டும் அடைந்திடல் எளிது. உள்ளத்தின் அருளை இழந்தால், இழந்ததுவே. அதை மீண்டும் அடைதல் அரிது.

249
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.

அருள் இல்லாதவர் செய்யும் அறத்தைப் பற்றி ஆராய்ந்து அறிந்தால், அது, தெளிந்த ஞானம் இல்லாதவர் ஒரு நூலின் மெய்ப் பொருளைக் கண்டதைப் போன்றதாகும்.

250
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து.

ஒருவர் தன்னை விட வலிமை குறைந்தவரை அச்சுறுத்தும் போது, தம்மிலும் வலியவர் முன்னே தாம் அஞ்சி நிற்கும் நிலையை நினைத்தல் வேண்டும்.

அடுத்த அதிகாரம் ➤ 26.புலால் மறுத்தல்

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *