Powered By Blogger

91. பெண்வழிச் சேறல்

அதிகாரம் #91 பெண்வழிச் சேறல்
(மனையாள் வழி நடத்தலான பிழை)
பொருட்பால் | அங்கவியல் குறள்# 901-910

901
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது.

மனைவியின் வழியிடத்து இன்பத்தை நாடி, அவள் சொல்கேட்டு நடப்பவர், புகழைத் தரவல்ல அறம் தாங்கிய சிறந்த வாழ்வைப் பெற மாட்டார்; கடமை சார்ந்து செயலாற்றுவோர் விரும்பாத இன்பமும் அது. 

902
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்.

ஆண் ஒருவன் தன் கடமையை பேணிக் காக்க விழையாது, தன் மனைவியின் விருப்பத்தை முன்னிருத்தி செல்பவனிடத்தே உள்ள செல்வமானது, ஆண்களுக்கு பெரும் நாணத்தக்கதாகி அவனுக்கும் நாணத்தைத் தரும்.

903
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.

இழித் தக்க குணங்களையுடைய தன்னுடைய மனைவியைத் திருத்திடாமல், அவளிடம் பயந்து பணிந்து நடக்கும் இயல்புடையவனுக்கு, நல்லோரிடத்தே எப்போதும் நாணத் தக்கதான நிலையைத் தரும்.

904
மனையாளை அஞ்சும் மறுமை இலாளன்
வினையாண்மை வீறுஎய்த லின்று.

மனைவிக்குப் பயந்து வாழ்கின்ற, பிறவியின் பயனை எய்தும் வகையிலான வாழ்வமைந்திடாத ஒருவனின் செயலாற்றும் தன்மையில், சிறப்பு பெற்று பெருமை அடைவதில்லை.  

905
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற்று எஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.

மனைவிக்குப் பயந்து வாழ்கின்ற இயல்புடைய ஒருவன், நல்லவர்க்கு நன்மை சார்ந்த கடமைகளைச் செய்திடவும் எப்போதும் அஞ்சுவான். 

906
இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர்.

மனைவியின் தோளுக்கு அஞ்சி நடப்பவர், தாம் தேவர்களைப் போன்று சிறப்போடு வாழ்பவராகவே இருப்பினும், பெருமை இல்லாதவரே ஆவார்.

907
பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப் 
பெண்ணே பெருமை உடைத்து.

மனைவியிடத்தே பணிந்து அவளுக்கு ஏவல் பணிகளை செய்து வாழும் தன்மையுடையவரது ஆண்மையைக் காட்டிலும், தன் இயல்பிலேயே நாணத்தையுடைய பெண்மையின் தன்மையானது சிறந்த பெருமையை உடையது.

908
நட்டார் குறைமுடியார் நன்றுஆற்றார் நல்நுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர்.

மனைவியிடம் மதி மயங்கி அவளது விருப்பத்தின்படியே அடங்கி வாழ்கின்றவர், தன் நண்பர்களின் குறைகளைக் களைந்திட முன்வர மாட்டார்; யாதொரு நன்மையும் செய்திடலார்.

909
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்.

மனைவியின் சொல்கேட்டு அவளுக்கு ஏவல்பணி செய்கின்றவரிடம், அறநெறி சார்ந்த செயல்களும் அதன்கண் பொருள் செய்யும் முயற்சிகளும், பிற கடமைகளும் இருந்திட மாட்டாது.

910
எண்சேர்ந்த நெஞ்சத்து இடன்உடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.

நல்ல சிந்தனை மிக்க ஆற்றலோடு, நெஞ்சுறுதியும் நிரம்ப உடையவர்களிடம், எப்போதும் எதற்காகவும் பெண்டிரையே சுற்றிக் கொண்டு கிடக்கும் அறியாமைத் தன்மை இருப்பதில்லை.


வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *