Powered By Blogger

93. கள் உண்ணாமை

அதிகாரம் #93 கள்ளுண்ணாமை
(மதி கெடுக்கும் மதுவை உண்ணாதிருத்தல்)
பொருட்பால் | அங்கவியல் குறள்# 921-930

921
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.

மதுவிடத்தே விருப்பம் கொண்டு அதற்கு அடிமையானவர்கள், வாழும் காலம் தொட்டும் தன் புகழையும், சிறப்பையும் இழப்பதோடு அவர்களைக் கண்டு எதிரிகளும் அஞ்ச மாட்டார்கள். 

922
உண்ணற்க கள்ளை; உணில்உண்க சான்றோரான்
எண்ணப்பட வேண்டா தார்.

மது அருந்துதல் கூடாது. தாம், பெரியோர்களால் விரும்பி மதிக்கப்படுவதை விரும்பாதவர்கள் மட்டும் மதுவை அருந்தலாம். 

923
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.

மகனது குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளும் தாயின் முன்பாக, மது அருந்திக் கிடத்தலானது மிகவும் கொடியது எனும் போது, பிறரது குற்றங்களைக் கடிந்து கொள்ளும் சான்றோர் முன் மது அருந்துதல் எவ்வாறு மகிழ்ச்சி தருவதாகும்?

924
நாண்என்னும் நல்லாள் புறம்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெரும்குற்றத் தார்க்கு.

மதுக் குடித்து, அதன் மயக்கத்தால் அதற்கு அடிமையாகி  வீழ்ந்ததன் பெருங்குற்றத்திற்கு ஆளான ஒருவரிடத்தே, மனிதருக்கேயான இயல்பாகிய நாணம் என்கிற நற்பண்பு இல்லாமல் ஓடிவிடும். 

925
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.

விலை கொடுத்து மதுவை வாங்கி உண்டு தன் உடலை, தன்னிலை மறந்த மயக்கநிலை கொள்ளச் செய்யும் செயல் என்பது விவரிக்க முடியாத அளவிலான அறிவற்ற செயலாகும். 

926
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுஉண்பார் கள்உண் பவர்.

அறிவிழந்தவர் உறங்கிக் கொண்டிருப்பதும், இறந்து கிடப்பதும் வேறு வேறில்லை. அதுபோல், எந்நாளும் மது உண்டு மதி மயங்கிக் கிடப்பவர்கள் நஞ்சை உண்டவருக்கு ஒப்பானவரே அன்றி வேறில்லை. 

927
உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்.

பிறர் அறியாதவாறு மறைத்துவைத்து மதுவைக் குடித்த பின், அதன் மயக்கத்தின் விளைவால், தம் அறிவையும் தன் நிலையையும் இழந்து கிடக்கும்போது, அவ்வூரில் வாழ்கின்ற மக்களால் கண்டறியப்பெற்று எந்நாளும் எள்ளி நகையாடப்படுவர். 

928
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.

"நான் மதுக் குடித்து, மயங்கியதே இல்லை", என ஒருவன் பொய் சொல்வதை விட்டுவிடல் வேண்டும்; ஏனெனில், அவன் மது அருந்தியவுடன் தம் உள்ளத்துள் மறைத்து வைத்திருந்த உண்மை தாமாகவே பெரிதாக வெளிப்பட்டு விடும்.

929
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.

மதுக் குடித்து மயக்கத்தில் இருப்பவனிடம், அதைத் தவறென்று அறிவுறுத்தி, அவனைத் திருத்த முயற்சிப்பது என்பது நீருக்குள் மூழ்கியவனைத் தேடுவதற்காக தீப்பந்தம் ஏந்திச் செல்வதைப் போன்றதாகும். 

930
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.

மதுக் குடிக்காது தெளிந்த நிலையில் இருக்கும் ஒருவன், வேறொருவன் மதுகுடித்து மதி மயங்கிக் கிடப்பதைப் பார்க்கும்போது, "நாமும் மது குடித்தபின், இப்படித்தானே அறிவற்ற நிலையில் இருப்போம்?" என்பதைக் குறித்து எண்ணிப் பார்க்க மாட்டானா?


வலை ஆசிரியர்

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *