Powered By Blogger

94. சூது

அதிகாரம் #94 சூது
(கேடு தரும் சூதாட்டம்)
பொருட்பால் | அங்கவியல் குறள்# 931-940

931
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.

வெற்றி பெறும் திறம் உடையவராகவே இருப்பினும் சூதாடுவதை நாடுதல் கூடாது. சூதாட்டத்தால் வரும் வெற்றி என்பது, தூண்டில் முள்ளில் வைக்கப்பட்ட உணவை விழுங்கிய மீனைப் போன்றதாகும். 

932
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.

சூதாட்டத்தில் ஒரு வெற்றியைப் பெற்றதன் ஆவலால், தொடர்ந்து விளையாடி நூறு மடங்கு தோல்விகளைத் தழுவும் சூதாடிகளுக்கு, அதனால் நன்மைகளை அடையப்பெற்று வாழும் வழி தான் உண்டோ?

933
உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.

சூதாட்டத்தில் வென்று அதனால் ஈட்டிய பொருள் பற்றி, ஒருவர் கூறிக் கொண்டே தொடர்ந்து சூதாடுவாரேயானால், அவர்தம் கைவசம் உள்ள பொருளும் அதனால் ஈட்டப்பெறும் லாபமும் நீங்கி பிறரிடத்தேப் போய்ச் சேர்ந்து விடும். 

934
சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்.

துன்பம் பலவும் தந்து தாம் ஈட்டிய சிறந்த புகழையும் அழித்தொழித்து, வறுமையையும் தரக்கூடியதான சூதாட்டத்தைப் போன்று கேடு தரவல்லது வேறொன்றும் இல்லை. 

935
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.

சூதாட்டத்தையும், சூதாடும் இடத்தையும், தமது சூதாடும் கைத் திறனையும் எண்ணி பெருமைப்பட்டுக் கொண்டு அவற்றைக் கைவிடாதவர்கள் எல்லாப் பொருளையும் இழந்து எதுவும் இல்லாதவராகி விடுவர். 

936
அகடுஆரார் அல்லல் உழப்பர்சூது என்னும்
முகடியான் மூடப்பட் டார்.

சூதாட்டம் எனும் தீய வலையால் சூழப்பட்டு வீழ்ந்தவர்கள், வயிற்றுக்கு நிறைவான உணவைக் கூட உண்ண இயலாமல் பல துன்பங்களுள் வீழ்ந்து உழல்வர். 

937
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.

ஒருவர் தமது வாழ்க்கைக் காலத்தை சூதாடும் இடத்திலேயே கழிப்பவர்க்கு, அவருடைய பழமையான செல்வத்தையும், இயல்பாய் தன்னுள் கொண்டிருந்த நல்ல குணங்களையும் இழக்கச் செய்து விடும்.  

938
பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது.

சூதாட்டத்தைக் கைவரப் பெற்றவர்க்கு, அவர்தம் பொருள் யாவும் அழிந்து போவதுடன் அவரைப் பொய் பேச வைத்து, அவரது அருள்நிறை மனதையும் கெடுத்து துன்பத்தில் உழலச் செய்துவிடும். 

939
உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்.

சூதாட்டத்தை விரும்பி, அதற்கு அடிமையாகி வாழ்கின்றவரிடத்தே உடை, செல்வம், உணவு, புகழ், கல்வி ஆகிய ஐந்தும் சேராமல் அகன்று விடும். 

940
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்.

பொருளை பணயமாக வைத்து அவற்றை இழக்க இழக்க, சூதாட்டத்தின் மீது வருகின்ற ஆசையானது, தொடர் துன்பங்களால் உடல் வருந்தும் போது தம் உயிர்மீது வருகின்ற ஆசையைப் போன்றதாகும். 


வலை ஆசிரியர்

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *