Powered By Blogger

52.தெரிந்து வினையாடல்

(செயல்திறம் மிக்காரை ஆராய்ந்து தெளிந்து ஆளுதல்)

பொருட்பால் | அரசியல் | அதிகாரம் 52

511
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த 
தன்மையான் ஆளப் படும்.

செயலில், நன்மைகளையும் தீமைகளையும் ஆராய்ந்து தெளிந்து, அவற்றுள், நன்மைகளை மட்டும் விரும்பும் தன்மையுடையவரே, சிறந்த செயல்களை ஆற்றுதற்கு தகுதியுடையவராவார். 

512
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.

வருவாய் வரும் வழிகளைப் பெருக்கி, செல்வ வளங்களைக் கூட்டி, அதன்கண் வரும் இடர்களையும் ஆராய்ந்து நீக்கும் ஆற்றல் கொண்டவரே, செயல்கள் ஆற்றுதற்கு வல்லவர் ஆவார்.

513
அன்புஅறிவு தேற்றம் அவாஇன்மை இந்நான்கும்
நன்குஉடையான் கட்டே தெளிவு.

அன்பு, அறிவு, ஆற்றல் மிகும் செயல் திறம், பேராசை அற்ற மனப்பாங்கு, ஆகிய நான்கு பண்புநலன்களை உடையவரையே, பதவிக்குத் தகுதியானவரெனத் தெளிந்திடல் வேண்டும். 

514
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்.

எல்லா வகையிலும் ஆராய்ந்து, தெளிந்தபின் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆயினும், செயல்படும் வகைகளுள், அவர்தம் செயல்திறத்தால் மாறுபடுவோர், இவ்வுலகில் பலர் உண்டு. 

515
அறிந்துஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் 
வினைதான் 
சிறந்தான்என்று ஏவற்பாற் றன்று.

செயலைச் செய்யும் வழிமுறைகளை அறிந்தவராகவும், தம் திறத்தால் தடைகளையும் வென்று, செய்து முடிக்கும் வல்லமை பெற்ற ஒருவரைத் தவிர, வேறொருவரை சிறந்தவரென எண்ணி, அவரிடத்தே ஒப்படைத்தல் கூடாது. 

516
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு 
எய்த உணர்ந்து செயல்.

செயலை செய்பவரது தகுதிகளை ஆராய்ந்து, செயலின் தன்மைகளைத் தெளிந்தபின், செய்பவரையும் செயலையும் காலத்தோடு பொருத்தி உணர்ந்ததன் பின்னரே, அச்செயலை செய்வித்தல் வேண்டும்.

517
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

இந்தச் செயலை, இன்ன கருவிகளாலும் உத்திகளாலும், இன்னவர் செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து தெளிந்த பின், அச் செயலை அவரிடத்தே விடல் வேண்டும். 

518
வினைக்குஉரிமை நாடிய பின்றை அவனை 
அதற்குஉரிய னாகச் செயல்.

ஒருவரை, ஒரு பதவிக்கு உரியவர் என்பதைத் தெளிந்த பின்னர், அப் பதவியில், அவரை நியமித்து, அதன் பணிகளை அவரே செய்தற்குரியவரென, அவரிடமே ஒப்படைத்தல் வேண்டும்.

519
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக 
நினைப்பானை நீங்கும் திரு.

தான் ஏற்ற பதவியின்கண், செயல்திறத்தோடும் சிரத்தையோடும் பணியாற்றுபவரின் நட்புறவை தவறாக எண்ணுவோரிடமிருந்து செல்வம் அகன்று விடும்.

520
நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடாது உலகு.

நாட்டில் உயர் பதவியில் இருப்போர், தவறிழைக்காமல் இருந்தால், மக்களும் தவறிழைக்க மாட்டார்; அரசனானவர், அவர்களை நாள்தோறும் கண்காணித்து நிலைமையை ஆராய்தல் வேண்டும். 

வலை ஆசிரியர்

எனது படம்
தஞ்சாவூர், தமிழ்நாடு, India
எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

வலைப்பக்கத்தைத் தொடர்வோர்...

மொத்தப் பார்வைகள்

கருத்துக்களை மின்னஞ்சலில் பகிர்ந்திட...

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *